Saturday, July 14, 2012

அல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா?

இறைவனுக்கு உருவம் உண்டா?

ஒரு சிலர் உருவம் இல்லை என்றும் வேறு சிலர் உருவம் உண்டு என்றும் மேலும் சிலர் உருவம் உண்டு ஆனால் இல்லை என்று கொள்ளவேண்டும் என்றுமாய்க் குழப்புகின்றனர்.

குர்-ஆன் தனித்துவமான உயர் இலக்கிய நடையிலேயே பல உவமைகளையும் உருவகங்களையும் கொண்டதாக இருக்கிறது. அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தானே வந்துவிடும். பின் உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும்.

எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும். ”பிடரி நரம்புக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறான்” என்று சொன்னால், உருவமிருந்தால் இது எப்படி இயலும்?

பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும்போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது. என்றால் அங்கே உருவ இருப்பு கேள்விக்குறியல்லவா? அருவ இருப்பொன்றே ஆகக்கூடியது என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள்;. அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன 5:64

இதன்படி அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்று சிலர் கூறுகிறார்கள். அதனால் இறைவன் உருவம் உடையவன் என்கிறார்கள்.

ஆனால் மேலே உள்ள வசனத்தை எப்படிப் பொருள் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

குர்-ஆன் வசனங்கள் உயர் இலக்கிய நடையிலேயே இருக்கின்றன. அவற்றுக்கு சொல்லுக்குச் சொல் விளக்கம் கூறுவது பல சமயம் பிழையாகிவிடும்.


சில வசனங்கள் மிக எளிமையானவை அவற்றை எளிதில் நேரடியாகப் பொருள் கொள்ள இயலும். ஆனால் வேறு சில வசனங்கள் அப்படியானவை அல்ல. அப்படியான வசனங்களின் கருத்துக்களை முழுமையாய் உள்வாங்கிக்கொண்டு பின் பொருள் கூறவேண்டி இருக்கும். அப்போதுதான் அவை சரியாக அமையும்.

அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று யூதர்களைப் பார்த்து இந்த வசனம் இறங்கி இருக்கிறது. இந்த வசனம் இறங்கியபோது, யூதர்களின் கைகள் கயிற்றால் பிணைத்து கட்டப்பட்டு இருந்தனவா? இல்லையே? பிறகு ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது?

ஒருவனின் கைகள் கயிற்றால் கட்டப்படாதிருக்கும்போது, என் கைகள் கட்டப்பட்ட நிலையில் நான் நிற்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அதற்கு என்ன பொருள்? தன்னால் இயன்றதை தன்னால் செய்யமுடியாத இக்கட்டில் நான் நிற்று தவிக்கிறேன் என்று பொருளல்லவா?

யூதர்களின் கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன என்று கூறினால், யூதர்களால்தான் எதையும் செய்யமுடியாது என்று இறைவன் கூறுவதல்லவா? குர்-ஆன் வசனங்களை எப்போதும் நேரடியாய்ப் பொருள் கொள்ளக்கூடாது. அப்படிப் பொருள் கொண்டால் அது ஆபத்தான நிலைக்கு நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடும்.

அல்லாஹ்வின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று யூதர்கள் சொன்னால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வால் எதையும் செய்யமுடியாது என்று ஏளனம் செய்து அதை நம்பவும் வைத்து இஸ்லாமியர்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் நோக்கமல்லவா? அதற்காகவே தொடுக்கப்பட்ட ஏளனச் சொற்கள் அல்லவா அவை?

இங்கே கைகள் என்று கூறுவது, யூதர்களுக்கும் வெறும் கைகள் அல்ல, இறைவனுக்கும் வெறும் கைகள் அல்ல என்பது தெளிவாகிறதா?

இங்கே கைகள் என்பது சக்தி. ஆகவே அந்தக் குர்-ஆன் வசனத்திற்கான விளக்கம் இதோ:

அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியாது அதற்கான சக்தி அவனிடம் இல்லை என்று யூதர்கள் கூறுகிறார்கள். யூதர்களுக்குத்தான் எதையும் செய்யக்கூடிய சக்தி இல்லை. இப்படி யூதர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் இறைவனால் சபிக்கப்பட்டார்கள்;. அல்லாஹ்வோ எதையும் செய்யக்கூடிய வல்லமையை அளவின்றி பெற்று இருக்கிறான்.

1 comment:

  1. JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
    "Allah will reward you [with] goodness."

    ReplyDelete